'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Friday, October 30, 2009

வலைப்பதிவர்களுக்காக!!


இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.
முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப் பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங் களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.

Friday, October 23, 2009

'அச்சுவலைச் சந்திப்பு'

வலைப்பதிவர்களையும் ஊடகத்தாரையும் இணைக்கும் இனிய மாலை நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வலைப் பதிவர்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு (28-10-2009) முன்னதாக தமது வரவினை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

இடைநிறுத்தப்பட்ட கட்டுரை பேசுகிறது!!

இருக்கிறம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து கொண்டி ருந்த மிஸிஸ் காதலி எழுதிய ‘கணவன் மனைவி புதினங் கள்’ கட்டுரை அனேகமான வாசகர்களின் வேண்டுகோளுக் கிணங்க இடைநிறுத்தப்பட்டிருப்பது வாசகர்கள் அனை வருக்கும் தெரிந்த விடயம். இத்தொடர் இருக்கிறம் சஞ்சி கையில் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தை அதன் எழுத்தாளர் இங்கே தருகின்றார். படித்தபின் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
‘’கணவன் மனைவி புதினங்கள் தொடர் ‘இருக்கிறம்’ வாசகர்கள் மத்தியில் பிரதானமாக இருவகையான உணர்வுகளை எழுப்பி விட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதனை ஆர்வத்துடன் வாசிப்பவர்கள் ஒரு புறமும் ‘வரவர சரியான அப்பட்டமாகப் போகின்றது, இது நிறுத்தப்படவேண்டும்..” என்று குறை சொல்பவர்கள் ஒருபுறமுமாக இரு அணிகள் தோன்றியிருக்கின்றன. வாசகர்களே! அப்பட்டமாக உங்களுடன் பேசத்தான் இந்தத் தொடரே ஆரம்பிக்கப்பட்டது. உணவைப் போன்றே எமது உடற்தேவைகளில் ஒன்றாக பாலியல் தேவைகள் இருக்கும் வேளையில், அதனை மறைத்து மறுதலித்துத்தான் எமது சமூகம் இவ்வளவு சீரழிந்து போனது என்பது எனது வாதம். எங்கள் சமூகத்தில் குழந்தை எப்படிப் பிறக்கின்றது என்பதைக் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு விளக்க முடியாத பெற்றோர்களே மலிந்து கிடக்கின்றனர். ஆரோக்கியமான உடல் உள வளர்ச் சியில் எங்கள் செக்ஸ் நடவடிக்கைகள் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. எங்களைப் பீடிக்கும் பல மனக்கோளாறுகளின் அடிப்படையில் செக்ஸ் ரீதியாகத் திருப்தியுறாத காரணிகள் இருப்பதை சைக்கியாட்ரிஸ்டுக்கள் கூறுகின்றனர். பண்டைய சீன டாவோயிஸ்ட் வைத்தியர்கள் தங்களிடம் வரும் நோயாளர்களுக்கு மூலிகைகள், அக்குபங்சர் முறைகள் இவற்றுடன் என்ன ஆசன முறையில் செக்ஸ் உறவு கொள்ள வேண்டுமென்றும் விளக்கி அனுப்புவார்களாம். தகுந்த உணவு முறை எங்களை ஆரோக்கியமாக வைத் திருப்பதைப்போல தகுந்த செக்ஸ் நடவடிக்கைகளும் ஆரோக்கியத்தைப் பேணக்கூடியன என்பது லொஜிக்தானே. அதை டாவோ யிஸ்ட் வைத்தியர்கள் தான் எங்களுக்கு வந்து சொல்ல வேண்டுமென்று அவசிய மில்லை தானே. இதைப் பற்றிய பூரண அறிவு கிடைக்காமல் சும்மா சினிமாவில் பார்த்தது அரைவாசி யும், ஏதாவது ஆபாச செக்ஸ் படத்தில் பார்த்த அரை வேக்காடு விஷயங்களை வைத்து மறுபாதியுமாகத்தான் இவற்றை கொப்பி அடித்து எங்கள் தம்பதியினரில் அனேகம்பேர் வாழ்ந்து கொண்டு போகின்றனர். செக்ஸ் நடவடிக்கையின் உச்சக்கட்ட உணர்வுகளை அனுபவியாமலே வாழ்ந்து இறந்து போகிறவர்கள் எத்தனை ஏராளம் தெரியுமா? என்ன பரிதாபம். இவ்வாறு அத்தியாவசியமான ஒரு உடலியக்கத்தையே தகாத நடவடிக்கை யாக்கி சென்சர் பண்ணி அதைச் சுற்றி ஒரு மர்ம வேலி போட்டு எமது இளம் சமுதாயத்தினரைப் பாடுபடுத்துகின் றோம். அவர்களை அநாவசியமாக பெரும் அழுத்தத்திற்குள்ளாக்குகின்றோம். மகிழ்சசியுடன் அனுபவிக்கப்படவேண்டிய வாழ்க்கையே சிலசமயங்களில் சுமையாக மாற வேண்டிய நிர்ப்பந் தம். பாலியல் உணர்வுகளுக்கான முறையான வெளிப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் களவாக சிறுவர் துஷ்பிரயோகத்தில்கூட ஈடுபடுகின்ற பண்பாடுதான் எங்கள் மத்தியில் மலிந்து வரும். நாங்கள் மூடிக் கட்டக் கட்ட, அது போர்னோ விடயங்களாக ஆபாசப்படங்களாக, பாடசாலை மற்றும் பல்கலைக் கழகங்களில் துர்நடத்தைகளாக, பிதுங்கிக்கொண்டு வெளியே வரும். சூடான இன்டர்நெற் சமாச்சாரங்களுக்கும், ஆபாசத் திரைப்படங்களுக்கும், போர்னோ சஞ்சிகைகளுக்கும் ரெடி மார்க்கட் உண்டாக்கப் பட்டிருக்கின்றது. சென்சர் அனுகுமுறையை விட்டு திறந்த சுதந்திர மான கருத்துப் பரிமாற்றங்கள் உள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் முன்வரவேண்டும். அதற்கு ‘இருக்கிறம்’ சஞ்சிகை தரும் பங்களிப்புக்கள் பெறுமதியானவை. இனியாவது இரு வாசகர் அணிகளும் ஒன்று சேர்ந்து ஒரு ஆதரவணியாகத் திரள வேண்டும் என்று தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
“எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே..”
-மிஸிஸ் காதலி-