'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Wednesday, June 30, 2010

“இருக்கிறம்” இதழ் 57

இருக்கிறமின் 57ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. முன்னாள் போராளிகளின் திருமண புகைப்படத் துடன் அட்டைப்படம் வெளிவந்துள்ளது.

வழமைப்போல கதைகள், கட்டுரைகள், விளை யாட்டு, சினிமா என்று பலதரப்பட்ட ஆக்கங்கள் தொடர்கின்றன.

இம்முறை 'நேரடி ரிப்போட்டில்' 53 ஜோடிகளின் திருமணம், இந்த திருமணம் நடந்த பிண்ணனி, நடத்தி வைத்தவர்கள், மணமான ஜோடிகளின் மனநிலை என்பன பற்றி அலசி ஆராயப்பட்டுள்ள து. பல வெளிவராத தகவல்கள் வெளிவந்திருக் கின்றன.

தேவைப்பட்ட இடத்தில் குற்று போடாமல் விட்ட தால் ஏற்பட்ட விளைவை நகைச்சுவை எழுத் தாளர் வேதநாயகம் ‘காசுமேல காசு வந்து’ என்ற தலைப்பில் நகைச் சுவையாக எழுதியுள்ளார்.

டொக்டர் முருகானந்தன் தன் மருத்துவ கட்டுரையில் தாய்ப்பாலைப் பற்றிய பல்வேறு தகவல்கள், தாய்ப்பால் ஊட்டும் விதம், பாலின் தரம் என பல பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளார்.

வாசிக்கும் நெஞ்சங்களை சிறிது நேரம் சிரிக்க வைக்க ‘இளமை புதுமை கலாட் டா’ வெளிவந்திருக்கின்றது.

திருமணத்தில் சட்டம் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது பற்றி ‘சட்டம் பேசுகிறது’ பகுதி அலசிஆராய்கின்றது. திருமணத்தின்போது எவ்வாறான விடயங்கள் பற்றி கருத்திற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறு கின்றது.

‘தெரிந்த ராமனைவிட தெரியாத ராவணன் எவ்வளவோ மேல்’ என்ற பஞ்ச் தலைப்பில் ராவணன் திரைப்பட விமர்சனம் சுடச்சுட வெளிவந்துள்ளது.

யுத்தம், இடம்பெயர்வு என இன்னோரன்ன பிரச்சினைகளால் வடக்கு கிழக்கு மக்கள் காணிப்பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அந்த வகையில இம்முறை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவில் வசித்து வரும் மக்கள் காணிப் பிரச்சினை மற்றும் காணி உறுதிப்பத்திர பிரச்சினை களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை பற்றி ‘கிடைக்குமா தீர்வு’ என்ற தலைப் பின் கீழ் கட்டுரையாளர் சத்தியா எழுதியுள்ளார்.

மலையகப் பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அதற்கான கொடுப்பனவு கிடைக்காத மாணவி ஒருவரின் நிலைமை, அவரது தாயின் ஆதங்கம் பற்றி ‘புறக்கணிக்கப்படும் மலையக மாணவர்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.

இவற்றோடு இருப்பு, பதிப்பகத்தார், கார்ட்டூன், கமலாமாமி, அதற்குத்தக, குட்டிக்கதை, றொஷானியின் ‘புரிந்துகொள்ளவேண்டிய புரிதல்’, மயூரனின் விளையாட்டு, மொழிவாணனின் பேய்க்கதை, தொழில்நுட்பதகவல்கள், அன் பழகனின் ‘பெறுமதி மிக்க கருவி’, மணிப்புலவர் மருதூர் மஜீத்தின் ‘நாட்டார் பாட ல்கள்’, வாசக நெஞ்சங்களின் கருத்துக்கள் என சுடச்சுட இருக்கிறம் வெளி வந் துள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 56

பல புதிய ஆக்கங்களைச் சுமந்து இருக்கிறமின் 56 ஆவது இதழ் உள்ளேகாணப்படும் முக்கியமான ஆக்கங்களை பிரதிபலிக்கும் அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஐபா திரைப்பட விழா கொண்டாத்தின் பிண்ணனி பற்றியும் ‘தமிழன் என்ன இழிச்சவாயனா’ என்ற ஆக்ரோஷமான தலைப்பில் பதிப்பகத்தார் பகுதி வெளிவந்திருக்கின்றது.

ஜீன் மாதம் 20ம் திகதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ‘நேரடிரிப்போர்ட்’ பகுதியில் கிளி நொச்சி மாவட்டத்தில்அகதிகளாக வந்தவர்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் ஆடு மாடுக ளைப்போல அடைத்துவைக்கப்பட்டுள்ளமை பற் றியும் அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கஸ்டங்களை கேட்டும் அவர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

‘ஒற்றுமைப்படவேண்டியநேரத்தில் ஒற்றுமைப்பட்டிருந்தால்’ என்ற தலைப் பிலான கட்டுரை இலங்கை தேர்தல் வரலாற்றில் கட்சிக்கு கட்சி ஒவ்வொரு வருக்கும் ஒருவர் முரண்பட்டதால் ஏற்பட்ட தாக்கங்கள், தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்பதற்காக அன்றிருந்த தமிழ்த் தலைவர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்றவை அடங்கலாக மனதை நெகிழவைக்கும் கட்டுரையை பிரபல மூத்த பத்திரிகையாளரான கோபு எழுதியுள்ளார்.

அஷ்ரப் சிஹாப்தீனின் ‘அதற்குத்தக’ வில் இணையத்தில் இளையவர்கள் தாங்களும் தளங்கள் உருவாக்கி எழுதும் முறை பற்றி நகைச்சுவையாகவும் அதேநேரம் அவற்றின் தரம் பற்றியும் தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

வுpக்ரமாதித்தனின் ‘சினிமா விமர்சனம்’ பகுதியில் இம்முறை ‘சிங்கம்’ திரைப்படம் ‘அரைத்த மாவில் கலக்கிய மசாலா’ என்ற தலைப்பில் அலசிஆராயப்பட்டுள்ளது.

‘சட்டம்’ பகுதி இம்முறை வாசகர்களின் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைந்துள்ளது. அன்றாட வாழ்வில் சில விடயங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எப்படி சட்டத்தின் உதவியை நாடலாம் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பற்றிய ஒரு பார்வை விளையாட்டுப் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்கள் எவ்வாறு இயற்கை அழகுடன் ஒப்பிடப்படுகின்றனர் என்பது பற்றி மணிப்புலவர் தன் இலக்கியப் பகுதியில் நயம்பட தந்துள்ளார்.

களச்சாராய உற்பத்தி. பெரும்பாலும் இன்று மலையகப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் ஒரு கிராமமே அழிந்து வருவது பற்றி ‘கசிப்பில் மூழ்கும் அட்டாம்பிட்டிய கிராமம்’ கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் கார்ட்டூன், செங்கை ஆழியானின் ‘அவருக்கு பாஸ் கிடைத்துவிட்டது’ சிறுகதை, மொழிவாணனின் காற்றாய் வருவேன், கமலா மாமி, ராவணா ஸ்பெஷல், தீபச்செல்வனின் கவிதை, அன்பழகனின் உளவியல் கட்டுரை, வேதநாயகத்தின் ‘கோச்சி வரும் கவனம்’ நகைச்சுவைக் கதை, டொக்டர். முருகானந்தனின் மருத்துவம், கலட்டா, தொழிநுட்பத் தகவல்கள், வாசகர் கருத்து என பலதரப்பட்ட படைப்பபுகளுடன் வெளிவந்துள்ளது 56 ஆவது இருக்கிறம். வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 55

பல இன்னல்களைத் தாண்டி 50 இதழ்களை தொட்டுவிட்ட நிலையில் எமது 55 ஆவது இதழ் பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

நேரடி ரிப்போர்ட், கிரைம்தொடர்,சட்டம், இலக்கியம் என ஒவ்வொரு ஆக்கமும் ஒவ் வொரு மெருகுடன் வெளிவந்துள்ளது.

‘சிங்கள தீவிரவாதத்தின் சூத்திரதாரி’ என்ற தலைப்பில் பதிப்பகத்தார் ரணில்விக்ரம சிங்கவின்அரசியல் பற்றி கூறுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் இன்று அரசால் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கொம்பனித்தெருவில் உள்ள சுமார் 20 குடியிருப் புக்களை இடித்து தரைமட்டமாக்கியமை. அக்குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களின் தற்போதைய நிலை பற்றியும் அது தொடர்பான சில அமைச்சர்களின் பதில்கள் என்பவற்றையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது ‘நேரடி ரிப்போர்ட்’ பகுதி.

நேர்முகம் பகுதியில் அன்மையில் சக்தி சுப்பர்ஸ்டார் போட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாத்தளையைச் சேர்ந்த சங்கீதாவின் சிறப்பு பேட்டி இடம் பெற்றுள்ளது.
எதிராளிகளையும், ரோதிகளையும், வில்லன்களையும் கொலைசெய்வது பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். அன்பு காதலனே தன் காதலியை கொலை செய்ததைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ராஜகிரியவில் உள்ள புகழ் பெற்ற ரோயல்பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் இடம்பெற்ற வோனி ஜோன் ஸனின் கொலை பற்றி மிகவும் பரபரப்பாக வெளிவந்துள்ளது ‘கிரைம் பக்கம்’.

‘வளர்ச்சிப்பெறுமா மலையக விளையாட்டுத்துறை’ என்ற தலைப்பின் கீழ் இன்று மலையகத்தில் அருகிவரும் விளையாட்டுத்துறை பற்றி அலசி ஆராயப் பட்டுள்ளது.

‘கொமடியாகிப்போன நமது அரசியல்’ என்ற அதிரடி தலைப்பின் கீழ் விக்ரமாதித்தனின் சினிமா விமர்சனம் வெளிவந்துள்ளது. இம்முறை இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம் பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது.

‘சட்டம்’ பகுதியில் இம்முறை சட்டத்தரணி விவேகானந்தனால் அவசரகால சட்டம் என்றால் என்ன? மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற மூன்றாவது 20-20 உலகக் கிண்ண போட்டி பற்றிய ஒரு விறுவிறுப்பு ஆக்கம் இடம்பெற்றள்ளது.

டொக்டர் முருகானந்தம் எழுதிவரும் மருத்துவப் பகுதியில் ‘காதலும் உடல்நலமும்’ என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் காதலின் அவசியம், காதல் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன பற்றி மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இன்று எம்மவர் மத்தியில் இலக்கியம் பற்றிய அறிவு அருகிக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சுவாரஸ்யமான பகுதிகள் செய்யுள் மற்றும் உரைநடையில் இலக்கியம் பகுதியில் ‘சீறாப்புராணமும் சீவகசிந்தாமணியும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

அரங்கியல் பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற ‘நவ பிரதீபா 2010’ நிகழ்வைப்பற்றிய ஒரு கண்ணோட்டம் தரப்பட்டுள்ளது.

இன்று பொதுவாக எல்லா பஸ் வண்டிகளிலும் காணப்படும் ஒரு முக்கிய பிரச்சினைதான் இந்த மிகுதிக்காசு. இதை அடிப்படையாக வைத்து இம்முறை ‘தோட்டியின் பதிவு’ மிகவும் சுவாரஸ்யமாக வெளிவந்துள்ளது.

இவற்றோடு அஸ்ரப் சிஹாப்டீனின் ‘கண்ணேறு’, அன்பழகனின் ‘நான் சரியில்லை’, கார்ட்டூன்,கமலாமாமி,மொழிவாணன் எழுதும் திகிலுட்டும் பேய்க்கதை ‘காற்றாய் வருவேன்’, ‘சிறையிலிருந்து ஒரு மடல்’, தொழிநுட்ப தகவல்கள், கொஞ்ச நேரம் மற்றும் வாசகர்களின் கருத்துக்கள் அடங்கி 55 ஆவது இருக்கிறம் புதுமெருகுடன் வெளிவந்திருக்கிறது.
வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.