'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Sunday, January 16, 2011

“இருக்கிறம்” இதழ் 62

‘மீண்டும் மக்கள் குடியேறும் விசுவமடு’ என்னும் தலைப்புடன் தமது இடத்தைநோக்கி நகர்ந்து செல்லும் மக்களின் ஒருபுறம் எதிர்பார்ப்பு நிறைந்த முகங்களைத் தாங்கிய புகைப்படத்தை அட்டைப் படமாகத் கொண்டு இருக்கிறமின் 62ஆவது இதழ் வெளிவந்துள்ளது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று கருத்தைப் அடிப் படையாகக்கொண்டு வித்தியாசமான அட்டைப் பட வடிவமைப்புடன் வாசகர்களுக்கு விருந்து படைக்கவென புதியதொரு வகையிலும் புதுப்புது விடயங்களுடனும் வெளிவந்துள்ளது.

மக்களின் வாழ்க்கையோடு பிண்ணிப்பினைந்த கதைகள்,கட்டுரைகள் மற்றும் விளையாட்டு, சினிமா பற்றிய விடயங்களுடன் தொடர்கின்றது இருக்கிற மின் பார்வைகள்.

நேரடி ரிப்போட்டில் ‘மரணங்கள் மலியத் தொடங்கிய முதல் நிலம்’ எனும் தலைப்பில் விசுவமடு மக்களின் அவல நிலைபற்றி அலசி ஆராயப்பட்டுள்ளது.

'யாழ் - கொழும்பு பயணமும் திண்டாடும் பஸ் பயணிகளும்’ எனும் தலைப்பில் யாழ் கொழம்பு பயணிகள் படும் அவஸ்தைகள், சலிப்புகள் என்பவற்றை படம்பிடித்துக் காட்டும் வகையிலான ‘உண்மையின் பதிவு’ இம்முறை பிரசுரிக்கப் பட்டுள்ளது.

பழங்களைத் தோலுடன் சாப்பிடுங்கள்’ என்று சொன்னால் கேட்காதவர்களும் டொக்டர் முருகானந்தன் சொன்னால் கேட்குமளவுக்கு இம்முறை மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோய்க்கான குறிப்புக்களுடன் வெளிவந்துள்ளது.

இதைவிட பொலிஸ் முறைப்பாடுகள் பற்றி அறிந்தவர்கள் வெகு குறைவாகவே உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இதுதொடர்பில் விளக்கம் அளிக்கும் வகையில் சட்டம் பேசுகின்றது பகுதி இம்முறை வெளியாகியுள்ளது.

‘யாழ்ப்பாணத்தில் எப்போது துளிர்விடும் ஐனநாயகம்?’ எனும் தலைப்பில் அன்மையில் இடம்பெற்ற ஐ.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெற்றி மீதான தாக்குதல் பற்றி சிறப்புக் கட்டுரைப்பகுதியை கண்ணன் எழுதியுள்ளார். மலையகத்தில் அதிகரிக்கும் சிறுவர் தற்கொலைகள் எனும் தலைப்பில் மலையகப்பிரதேச வாழ் சிறுமிகள் இருவரின் தற்கொலைச் சம்பவங்களைக் கூறும் அதிர்ச்சித்தகவலுடன் இம்முறை ‘க்ரைம் பக்கம்’ வெளிவந்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளாக உரிமைக்காக போராடிய ஒரு சமூகம் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. காலத்தின் கோலங்களாக உண்மையின் ஆய்வு புலனாய்வுப் பார்வையாக உள்ளே..

மேலும் இருந்ததையும் இழந்துவிட்ட பிறகு இருப்பிற்காய் இல்லாததைத் தேடுவதில் என்ன பயன்? என்று விளம்பும் ஆசிரியரின் இருப்புடனும் இருக்கிறமின் இம்மாத இருப்பை புலப்படுத்தி வெளிவந்துள்ளது இவ்விதழ்.

இவற்றோடு கார்ட்டூன், அதற்குத்தக, மொழிவாணனின் காற்றாய் வருவேன், அறிவியல் ரவுண்டப் வாசகர் கருத்து மற்றும் ‘கற்பு காணாமல் போய்விட்டதா’ என்ற மருதூர். ஏ. மஜீத்தின் சிறுகதையுடன் ‘இருக்கிறம்’ வெளிவந்துந்துள்ளது. படித்துப்பாருங்கள் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்க கருத்துக்களம் தாயாராக உள்ளது.

“இருக்கிறம்” இதழ் 61

இருக்கிறமின் 61 ஆவது இதழ் இதோ வெளிவந்து விட்டது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையைப் பிரதி பலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் கூடிய அட்டைப்படத்தைத் தாங்கிவெளிவந்துள்ளது. 61 ஆவது ‘இருக்கிறம்’

வழமைப்போல கதைகள்,கட்டுரைகள், விளை யாட்டு, சினிமா. என்று பலதரப்பட்ட ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது இம்மாத இதழ்.

நான்காம் பக்கத்தில், அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய “மன்னார் செம்மொழி விழாவும்” சொல்லவேண்டிய சங்கதிகளும் ஸ்பெஷல் ரிப்போர்ட்டாக வெளி வந்துள்ளது. தமிழ்நாடு செம்மொழி விழாவை அடுத்து அண்மையில் மன்னாரில் நடத்தப்பட்ட செம் மொழி விழா பற்றிய நிகழ்வின் பதிவும் சொல்லப் படாத சங்கதிகளும் இதில் உள்ளடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையும், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.

பாதை ஒழுங்குகள்ஓட்டுனரின் ஒழுங்கு விதிகள் போன்றவற்றை ஆராயும் உண்மையின் பதிவு 12 ஆம் பக்கத் தில்.

எழுபது எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் - சிங்கள உறவுகள் எவ்வாறு இருந்தன? அவ்வுறவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன? அதற்குப் பின்னால் இருக்கும் விபரீதம் என்ன? ஒரு அனுபவப் பகிர்வாய் அமைந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் கோபுவின் கட்டுரை இவ்விதழில்.

வாசகர்களின் மத்தியில் இன்று அதிகமாக எழும்புகிற சந்தேகமே இந்த நயன்தாரா - பிரபுதேவா சர்ச்சை! அந்தவகையில் அது தொடர்பில் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றியும்இ அவர்களின் திருமணம் நிலைக்குமா என்பது பற்றியும் இ திருமணம் எவ்வாறான சட்டதிட்டத்தின் கீழ் அமையவேண்டும் என்பது பற்றியும்இ “சட்டம் பேசுகிறது” பகுதி அலசி ஆராய்கின்றது.

திரைப்பார்வையில் இரு மனங்களுக்கிடையிலான காதல் உணர்வுகளை உணர்வுபூர்வமாக தந்திருக்கின்ற “I the mood forLove” திரைப்படத்தின் சிறப்புக் கண்ணோட்டம் இடம்பெற்றிருக்கின்றது.

“புள்ளி விபரங்களின் பின்னால் மறைந்திருக்கும் சோகங்கள்” என்ற தலைப்பில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் பற்றிய ஓர் சிறப்புக்கட்டுரை 34 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு இலக்கணமாய் இருந்த யாழ்ப்பாணம், போகும் போக்கைப் பற்றிய “ஸ்பெஷல் ரிப்போர்ட்” பக்கம் 26 இல்.

இவற்றுடன் பல அறிவியல் தகவல்கள், செய்திச் சிதறல்கள், அதற்குத் தக, தொடர், இலக்கியம், புலனாய்வுக் கட்டுரை, மருத்துவம், உளவியல், மலையகம், தொழிநுட்பம், நேர்முகம், ஊடக மயக்கம், சிறுகதைகள், நகைச்சுவை என்று பக்கங்கள் விரிகின்றன. உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 60

இதோ வெளிவந்துவிட்டது இருக்கிற மின் 60 ஆவது சிறப்பிதழ்.
வடக்கில் நடந்த ஏர்பூட்டு விழாவின் புகைப்படத்தை தாங்கி நூறு பக்கங்களில் வெளிவந்துள்ளது இம்முறை இருக்கிறம்.

யாழ்ப்பாணத்தில் 15 வருடங்களின் பின்னர் 950 ஏக்கர் பரப் பளவில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் விவ சாயிகளுக்கு மானிய அடிப்படையில் உளவு இயந்திரங்கள் மற் றும் உரம் என்பன வழங்கப்பட்டன. இதற்குப் பின்னால் ஏழை விவ சாயிகளின் கருத்துக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது இவ்விதழின் ‘நேரடி ரிப்போர்ட்’.

எல்லோராலும் பரவலாக பேசப்பட்ட 'எந்திரன்' திரைப்படத்தின் விமர்சனம் எந்திர வேகத்தில் சுடச் சுட 'சங்கரின் எந்திரன் ஏற்படுத்திய மாயையும் கருணாநிதியின் ஏகபோக சினிமா வியாபார உத்தியும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

ஈழத்தமிழரின் கடல் வழிப்பயணம், பாக்கு நீரிணையில் அவர்கள் படும் அவலங்கள்,துயரங்கள் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை 14 ஆம் பக்கத்தில்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தவர்களின் அனுபவங்களுடன் 'படிப்பினைகள் சொல்லும் பாடம்’ என்னும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் கோபுவின் பேனா பேசியுள்ளது. 'உறவின் கதை' பகுதியில் வன்னியில் யுத்தத்தால் தன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட ஒரு குடிமகன் தன் நிலையைக் கூறுகிறார்.

இம்முறைச் சிறப்பிதழில் சட்டத்தரணிகள் விவேகானந்தன் மற்றும் கே.ஜீ. ஜோன் ஆகியோர் வெவ்வேறான இரு சட்டங்கள் பற்றிப் பேசுகின்றனர். அத்தோடு வாசகர்களின் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்களும் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை ‘மலையகப் பகுதி’ சில ஆசிரியர்கள் தங்கள் தேவைகளுக்காக மாணவர்களை பயன்படுத்தும் நிலை பற்றியும் எதிர்காலத்தில் இதனை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கூறுகிறது. மல்லிகா என்ற பெண் பேயின் பிடியிலிருந்து தப்புகிறான் ராஜா. பேயைக் கண்டுபிடிக்கும் படலம் ஆரம்பமாகிறது. அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை பக்கம் 58 இல் பாருங்கள்.

'ஒரு கண்டுபிடிப்பாளனாக வரவேண்டும் என்ற தலைப்பில் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துவரும் ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த இளம் புத்தாக்குனர் மதனுடனான நேர்காணல் 68 ஆவது பக்கத்தை அலங்கரித்துள்ளது.

கரடியனாறில் நடந்த வெடிவிபத்தின் பின்னணி என்ன? பரபரப்பான புலனாய்வுக் கட்டுரை பக்கம் 88 இல்.

நீண்ட தூர பிரயாணத்தில் ஈடுபடும் பஸ்ண்டிகள் பயணிகள் தேநீர் அருந்தவோ சாப்பிடுவதற்கோ ஒரு இடத்தில் நிறுத்தப்படுவதுண்டு. அந்த இடங்களில் நடப்பது என்ன? அக்கடைகளின் சமைய லறை மற்றும் கழிவறைகளின் நிலை என்ன? இந்த இதழின் உண்மையின் பதிவைப் பாருங்கள்.

இவை மட்டுமல்ல. இன்னும் உள்ளே வசந்தம் அறிவிப்பாளர்களுடனான கலாட்டா, பதிப் பகத்தார், சிறுகதைகள், தொழிநுட்பத் தகவல்கள், கவிதைகள், ஜோக், அறிவியல் தகவல்கள், கார்ட்டூன் விளையாட்டு, சமையல் குறிப்புகள், மருத்துவம், மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள், நகைச்சுவைக் கதை, சினிமா, இலக்கியம் அத்தோடு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக மயக்கம் பகுதி இன்னும் 60 ஆவது 'இருக்கிறம்’ சஞ்சிகையை வாழ்த்திய பலதரப்பட்டவர்களின் வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 59

சிதைந்துபோன முல்லைத்தீவின் இன்றைய காட்சியை அட்டைப் படமாகக் கொண்டு கண்ணைக் கவரும் வண்ணத்தில் வெளிவந்துள்ளது 59 ஆவது ‘இருக்கிறம்’.

ஒவ்வொரு இதழிலும் வாசகர்களுக்கு புது விடயங்களை அள்ளி வழங்கும் 'இருக்கிறம்' இம்முறையும் பல விடயங்களை தாங்கி வந்துள்ளது.

ஆரம்ப ஆக்கமாகவே 'நல்லூர் கந்தனும் சிங்கள மக்களும்' என்ற தலைப்பில் விஜேந்திரன் நல்லூரின் இன்றைய நிலையை கண்முன் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

நாளைய இலங்கையைப் பற்றி ஆரூடம் கூறுவதாக பதிப்பகத்
தார் அமைந்துள்ளது.

அன்றிலிருந்து இன்றுவரை முதலாளிகளின் தொழிலாளிகள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அதிலும் மலையகத் தோட்டத்தொழிலாளிகளின் பாடு பெரும் பாடாக இக்கின்றது. இந்த நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சந்திரசேகரனின் ‘அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணின் அழுகுரல்!’ கட்டுரை அமைந்துள்ளது.

அடுத்து மொழிவாணன் எழுதும் திகில்தொடரில் இம்முறை பேயின் குறி ராஜா. அவனுக்கு என்ன நடக்கப் போகின்றது என்ற மர்மத்துடன் கதை நகர்கின்றது.

சீ.என்.சீ கப்பலைப் பற்றிய கதை அண்மைய நாட்களாகப் பேசப்படும் ஒன்று. கனேடிய வாழ் இலங்கைத் தமிழர்களே, கனடாவுக்கு சீ.என்.சீ கப்பலில் வரும் தமிழர்களுக்கு எதிராகக் கோசம் எழுப்புகின்றனர் என்றால் நம்புவீர்களா? கண்ணனின் 'அகதிகளுக்கான வாசலை மூடத்தயாராகும் கனடா’ கட்டுரையை வாசியுங்கள்.

ஒவ்வொரு முறையும் வாசகர்கள் பயனுறும் வகையில் ஒவ்வொரு அடிப்படைச் சட்ட விளக்கம், சட்டத்தரணி விவேகானந்தனால் தரப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை திருமணத்தில் சட்டம் எவ்வாறு பயன்படும் என்பதை இந்த இதழின் 'சட்டம் பேசுகிறது’ பகுதி விளக்குகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழா வர்ணப்படங்களுடன் அரங்கியல் பார்வையாக வெளிவந்துள்ள அதேவேளை, அண்மையில் இலங்கை வந்து நந்தவனம் இலங்கை சிறப்பிதழை வெளியிட்ட நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரனின் நேர்முகமும் இடம் பெற்றுள்ளது.

யுத்தத்திலிருந்து மீண்டும் யுத்தவடுக்களுடன் வாழும் முல்லைத்தீவு, மற்றும் அம்பாறை மாவட்டங்களின் இன்றைய நிலைப்பாடு, அம்மக்களின் இன்றைய நிலையை விளக்கும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் இன்று மாணவர்களின் கல்வி நிலை எந்தளவு பாதிக்கப்பட்டுகின்றது என்பதை லோஜியின் 'ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர் இடைவிலகல்’ ஆக்கத்தில் விளங்கிக்கொள்ளலாம்.

இன்னும் பல வாழ்வியல், கட்டுரைகள், உளவியல், மருத்துவம், நகைச்சுவை, குட்டிக்கதை, பயனுள்ள அறிவியல் தகவல்கள், தொழில்நுட்பம், இருப்பு என பல அம்சங்களைத் தாங்கி வெளிவந்துவிட்டது 59வது 'இருக்கிறம்' உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 58

இருக்கிறமின் 58 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. மீளக்குடிய
மர்ந்த வன்னி மக்களின் இன்றைய நிலை பற்றிய புகைப்படத்தை தாங்கி இம்முறை “இருக்கிறம்” வெளிவந்துள்ளது.

மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கதைகள், கட்டுரைகள் மற்றும் விளையாட்டு, சினிமா பற்றிய விடயங் களுடன் பக்கங்கள் விரிந்து செல்கின்றன.

“நேரடி ரிப்போட்டில்” நாவாந்துறை மக்களின் தண்ணீர்ப் பிரச்சினை பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 65 குடும் பங்கள் வசிக்கும் அப்பிரதேசத்துக்கு குடிநீர் வழங்காமைக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராயப்பட்டு பல தகவல்களுடன் வெளிவந்திருக்கின்றது.

பக்கம் 9 இல் “எனது மகன் திரும்பி வருவான்” என்ற தலைப்பில் தீபச்செல்வன் எழுதிய சிறுகட்டுரை காணப்படுகின்றது. ஒரு தாய் தன் மகன் காணாமல் போனமை பற்றிக் கூறும் கண்ணீர்க் கதை நெருப்பாய்ச் சுழழும் நினைவுகளாய் சுட்டெரிக்கின்றது.

தொடரும் “காற்றாய் வருவேன்” பேய்க்கதைத் தொடரில் மொழிவாணன் தனக்கே உரிய பாணியில் இம்முறையும் ஒரு விறுவிறு பயங்கரத் தொடரைத் தந்துள்ளார். இம்முறை மோகனுக்கு நடந்த கதி என்ன? பக்கம் 14 ஐப் பாருங்கள்.
“சிந்திக்குமா முஸ்லீம் காங்கிரஸ்” கட்டுரை முஸ்லீம்களின் சமுதாய நிலை பற்றியும் அவர்களது அரசியல் தலைமைகளின் நடவடிக்கை பற்றியும் பேசுவதோடு இனி வரும் காலங்களில் முஸ்லீம் தலைமைகள் மக்களுக்காக செய்ய வேண்டியவற்றையும் கூறுகின்றது.

இம்முறை மருத்துவத்தில் டொக்டர் முருகானந்தன் கொலஸ்ட்ரோல் பிரச்சினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிக் கூறுகிறார். வழமைப்போல இம்முறையும் “சட்டம் பேசுகிறது” பகுதியில் விவாகரத்தில் சட்டம் கொண்டுள்ள ஆதிக்கம் பற்றி சட்டத்தரணி விவேகானந்தன் எழுதியுள்ளார். பெறுத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த 19 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடந்த சுவாரயங்களை விளையாட்டுப் பகுதியில் சீ.கே. மய+ரன் தொகுத்தளித்துள்ளார்.

தயாரிப்பு, இசையமைப்பு என புதிய அவதாரமெடுத்துள்ள நடிகர் கருணாஸின் “அம்பா சமுத்திரம் அம்பாணி” திரைப்படம் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் இம்முறை சினிமா பக்கத்தில்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தற்பொழுது மீளக்குடியமர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் பிரச்சினை பற்றி “வன்னி மாணவர்களின் இன்றைய நிலை” கட்டுரை விபரிக்கின்றது.

“நிலையான வாழ்வாதாரத்திற்காக ஏங்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள்” என்ற கட்டுரை யுத்தத்தால் கணவன்மார் இல்லாது துன்பப்படும் பெண்கள் பொருளாதார ரீதியாக தாங்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றி விபரிக்கின்றது.

இவற்றோடு கார்ட்டூன் இ அஷ்ரப் சிஹாப்தீனின் “அதற்குத்தக”, கோபு எழுதும் அரசியல் கட்டுரை, பரபரப்பாக பேசப்பட்ட செம்மொழி தமிழ் மாநாடு பற்றிய காத்திரமான விமர்சனம் , இலக்கியம் , பாலா சங்குபிள்ளையின் சிறுகதை, உளவியல் கட்டுரை, இவற்றோடு கவிதை, ஜோக் என இன்னும் பல சுவாரஷ்யமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இருக்கிறமின் 58 ஆவது இதழ்.
உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.