'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Sunday, November 27, 2011

28.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம்.

காலம் ஒருநாள் மாறும்.

வணக்கம் என் உறவுகளே!

கால மாற்றத்தின் முடிவுறாத நிகழ்வின் ஊழித்தாண்டவம் எமது நிலங்களை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. மழை, வெள்ளம், இடப்பெயர்வென எமது நிலம் நீரால் நிறைந்து கிடக்கின்றது. நிவாரணத்துக்காய் மக்கள் அலைந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும். வீட்டுத் திட்டங்களும் மக்களைப்பார்த்து எக்காளமாய்க் கூச்சல் போட்டுச் சிரிக்கின்றன. எமது பிரதேசங்களில் அலைந்து வருகின்ற மனித ஓலங்கள் இன்னும் முடிவறாத பயணங்களில் துயரம் சூழ பயணித்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் வாசல்கள் இருண்டு போய்க்கிடக்கின்றன. பாதுகாப்பின் அடையாளங்கள் எங்கள் நிலங்களைக் கிளறி அடிக்கடி பயமுறுத்துகின்றன.

மௌனமாக எம் மன இடுக்குகளில் பதியப்பட்டுள்ள உயிரின் உணர்வுகளோடு ஒன்றிப்போக வாழ்வு நகர்கிறது. இமைப்பொழுதிலும் ரணமாகும் உயிரின் நிதர்சனத்தை உணர்ந்தவர்களாக எங்களின் வாழ்வு மழைநீருடன் கரைந்து கொண்டி ருக்கிறது.

நீண்டதும் கடினமானதுமான இழந்த வாழ்வை மீட்டெடுப்பதற்கான எமது போராட்டத்தில் நாம் சந்தித்து வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாட்கள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் அத்திபாரக் கற்களாக இருக்கிறன.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராஜ தந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் அரசு கேள்விக் குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக வும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்க வெண்டிய பொறுப்பு தமிழ்பேசும் தலைமைகளிடம் இருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான இந்த இரண்டரை ஆண்டுகளில் எமது உறவுகளின் அரசியல் தீர்வுக் கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே எமது அரசாங்கம் முனைவது கடந்த நாட்களில் ஏற்பட்டு வருகின்ற நிகழ்வுகளின் கசப்பான நினைவுகளிலி ருந்து தெரிகின்றது.

ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக் கப்படாத நிலையில் மேலும்பல வாழ்விடங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் எமது உறவுகள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழர் வாழ் விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு பரப்பப்படுகிறது. அசாதாரண சம்பவங் களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலை யிலுங் கூட மக்கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதி கரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்ட நிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீள வாழ்வதற்காக முயற்சி செய்வோம். எமது மக்களின் மனங்களில் அமைதி நிலவுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் ஏற்பட்ட முரண்பட்டநிலை நீங்கவேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை செய்யவேண்டும். யுத்தநிலை முடிந்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அமைதியாக வாழ்க்கையைக் கொண்டு போவதற்காக முயற்சிக்கின்றார்கள். இருந்தும் அது முடியவில்லை. இதுவரையும் எந்த அரசியல் தீர்வையும் அரசு முன்வைக்க வில்லை. எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

நிறையவே மக்களின் எதிர்பார்ப்புக்கள். நினைக்கவே முடியாத ஏமாற்றங்கள் என மனதில் கனதி யுடன் எங்களின் காலம் பயணிக்கிறது. அவர்களின் அவலங்கள் மறையவேண்டும். ஏக்கங்கள் தீரவேண்டும் எமது இளைய சமுதாயம் மக்களின் காவலர்களாக சமூகசிந்தனையுடையவர்களாக நினைவுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாக மாற வேண்டும். காலம் ஒருநாள் மாறும்.

உறவுகளின் கனவுகள் நிச்சயமாய் இப்பூமியில் பூக்கும் என்ற நம்பிக்கையுடன் கடைசி இதழில் கனத்த மனதுடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

ஆசிரியர்
28.11.2011

Monday, November 21, 2011

21.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம்.

கார்த்திகைத் தீபஒளி

வணக்கம் என் உறவுகளே!

கார்த்திகை மாதம் கனவுகளைச் சுமந்து உயிர்களின் வலிகளைத் தொலைத்த மாதம். எம்மினத்தின் வரலாற்றுப் பயணத்துக்காய் கருவாகி வித்தாகி வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளை நினைவுகூறும் அந்த நாட்கள் நினைவில் கனக் கின்றன.

புனித பூமியில் புயலாய் விசிய பயங்கரவாதம் எமது நிலங்களை ஆக்கிர மித்து உறவுகளைத் தொலைத்துச் சென்றதன் விளைவு.. இன்று எமது வீரத்தின் சின்னங்களுக்கு நன்றிசெலுத்தும் காலம் கனவாய்க் கலைந்து கிடக்கிறது. கல்லறைகள் சிதைக்கப்பட்டு முட்புதர்களால் மண்டிக் கிடக் கின்றன. மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டு கிடக்கும் உறவுகளின் கனவுகள் தீர்வுகளுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.


சில்லென்று வீசிய காற்றும். சுகந்தம் வீசிய ரோஜாச் செடிகளும். அமைதியை உணர்வுகளால் உணரவைத்த கார்த்திகைத் தீப ஒளியும் இன்று அழிந்து போய்க்கிடக்கின்றது. ஆனாலும் உணர்வுகளால் வாழும் எம் உறவுகளின் மனங்களில் கார்த்திகை மாதம் பல அழியாத நினைவுகளை நினைவூட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கும் நிலையில் எமது சனங்களின் வாழ்வு இன்று வலுவிழந்துபோய்க் கிடப்பதால் தான் என்னவோ கார்த்திகை மாதம் பூக்கும் கார்த்திகைப் பூக்களிலிருந்து கந்தக நெடி வீசுகிறது.


எந்தவித இராஜதந்திரம் இல்லாத அரசியல், சுயநலப் போக்குடைய உணர்ச்சி வசப்பட்ட அணுகுமுறை யாவும் மேலும் மேலும் எமது சனங்களின் வாழ்க் கையை பாதாள உலகத்திற்கே இட்டு சென்று கொண்டிக்கின்றன. முன்பு “ஒற்றுமையாகுங்கள்” என்று கூறிய வசனம் இன்று வேற்றுமையிலும் ஒற்றுமை காணுங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசத்தில் பூதாகாரமாய் உருவெடுக்கும் கோஷ்டி மோதல்களும் குத்து வெட்டுக்களும் கூத்தாடியாக இருக்கும் சமூகத்தை குதுகலத்தில் குளிக்க வைத்திருக்கின்றன. இதுவே முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சர்வதேசம் சிரிக் குமளவிற்கு புலம்பெயர்வாழ்வில் தற்போதைய அரைகுறை அல்லது அரைக் கால் தலைவர்கள் என தங்களை பெருமிதத்துடன் கூறுபவர்களினால் எம்தேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரமிக்கக்கூடிய வெற்றிகள்.


சிங்கள பௌத்த தேசம் ஒற்றுமையாக, இராஜதந்திர ரீதியாக, உணர்ச்சி வசப்படாத அணுகுமுறைகளினால் பெற்றுள்ள வெற்றிகளைகண்டு இன்று சர்வதேசம் திகைத்துள்ளது மட்டுமல்லாது, சர்வதேசம் மேலும் அவர்களுக்கு உதவப்போகிறது என்பதை அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற அறிக்கை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற உரைகள் கேள்வி பதில்களிலிருந்து ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. ஆகையால் உண்மையான சர்வதேச நிலைமை என்ன என்பதை புலம்பெயர் வாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.


சாத்வீக வழியில் எங்கள் அரசியல் உரிமைக்காக போராட வேண்டிய பொறுப்பு இன்று புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இருக்கிறது. அரசியல் போரா ட்டங்களை புலத்தில் அல்லாமல் நிலத்திற்கு மாற்றிக் கொள்வதே இன்ற அவசியமான தேவையாக இருக்கின்றது என்பதை எமது உறவுகள் உணர்ந்து கொள்ள வெண்டும்.


அவசியமானவற்றை அலட்சியம் செய்துவிட்டு தேவையற்ற முறையில் தமக்குள் தினமும் பிரச்சனைகளை அதிகரித்து கொள்வது, இறுதியில் எமது இனத்தை நாமே தாரைவார்த்து கொடுக்கும் நிலையை உருவாக்கும். ஆகையால் வருமுன் காப்பவர்களாக எங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய வேளை இது. உண்மையுடனும் உறுதியுடனும் உழைத்து கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழனும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் உறவுகளின் ஆன்மா சாந்தியடையட்டும்.


இழந்த உறவுகளை நினைவுகூறி நிற்கும் கார்த்திகைத் தீபஒளியின் கதிர்கள் அமைதியான வாழ்வுக்கான வழியை அடுத்த தலைமுறைக்காவது காட்டி நிற்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த இதழில் சந்திக்கிறேன்.
ஆசிரியர்
21.11.2011

21.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான கார்ட்டூன்

14.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான கார்ட்டூன்

Wednesday, August 3, 2011

01/08/2011 முதல் விற்பனையில்!!

25.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 17

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!!!

“கறுப்பு ஜூலையின் கறுப்பு நினைவுகள்”
தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் பற்றிய ஓர் வரலாற்றுப் பார்வை.

“யாழில் மிரட்டும் மினிவான்கள்”
யாழ்ப்பாண மினிவான்களில் நடக்கும் அட்டகாசங்களை வெளிக்கொண்டுவரும் உண்மையின் பதிவு.

“பீமன்கல் கிராமம் இழந்து நிற்கும் பொருளாதார வளம்”
நேரடி ரிப்போர்ட்

“சமுதாயத்தின் மறுபக்கம்”
இப்படியும் நடக்கிறது ஓர் தொகுப்பு.

“அபிவிருத்தியை நோக்கி….”
அபிவிருத்தியின் பதிவுகள்.

“அரசியல் சூழலுக்கு அவசியமான பாதுகாப்புச் சபைப் பிரேரணை – 1325”
தருவது மிஸ்டர் குரோ

“பாசம் + சட்டம் ஸ்ரீ கண்ணீர்”
தெய்வத் திருமகள் திihப்பட விமர்சனம்.

மேலும் பல வித்தியாசமான அம்சங்களுடன் வெளிவந்துவிட்டது இவ்வார இருக்கிறம் இதழ்.

Monday, July 25, 2011

18.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 16

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!
“விடுதலைப் புலிகளோடு முடிந்துவிட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுப் பாத்திரம்”
-அரசியல் கட்டுரை தருவது மிஸ்டர் க்றோ

“ஓமந்தை வரையிலான யாழ்தேவியின் பயணம்”
- ஸ்பெஷல் ரிப்போர்ட்.

“நாற்காலிக்காக நடாத்தும் போராட்டம்”
-எஸ்.எம்.கோபாலரத்தினம்

“உறவின் குரல்கள்” காணாமல் போன உறவகளின் கண்ணீர்க் கதறல்கள்

புனரமைக்கப்படும் “யாழ் கோட்டை” ஓர் வரலாற்றுப் பொக்கிஷம்
-நேரடி ரிப்போர்ட்

மாற்று வலுவுடைய யாழ் மாணவன் துசியந்தனின் ஒலிம்பிக் சாதனை
-யாழில் இருந்து எஸ்.ஏ.யசீக்

“கூடாரங்களில் வாழும் கொக்கிளாய் மக்கள்” கவர் ஸ்டோரி

பூர்வீகக் கிராமமொன்றின் கதை
-வன்னியிலிருந்து நேரடி ரிப்போர்ட்