'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Tuesday, January 10, 2012

எமது உத்தியோகபூர்வ இணையத்தளம்.


http://www.irukkiramonline.com/

1 comment: