கார்த்திகைத் தீபஒளி
வணக்கம் என் உறவுகளே!
கார்த்திகை மாதம் கனவுகளைச் சுமந்து உயிர்களின் வலிகளைத் தொலைத்த மாதம். எம்மினத்தின் வரலாற்றுப் பயணத்துக்காய் கருவாகி வித்தாகி வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளை நினைவுகூறும் அந்த நாட்கள் நினைவில் கனக் கின்றன.
புனித பூமியில் புயலாய் விசிய பயங்கரவாதம் எமது நிலங்களை ஆக்கிர மித்து உறவுகளைத் தொலைத்துச் சென்றதன் விளைவு.. இன்று எமது வீரத்தின் சின்னங்களுக்கு நன்றிசெலுத்தும் காலம் கனவாய்க் கலைந்து கிடக்கிறது. கல்லறைகள் சிதைக்கப்பட்டு முட்புதர்களால் மண்டிக் கிடக் கின்றன. மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டு கிடக்கும் உறவுகளின் கனவுகள் தீர்வுகளுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.
சில்லென்று வீசிய காற்றும். சுகந்தம் வீசிய ரோஜாச் செடிகளும். அமைதியை உணர்வுகளால் உணரவைத்த கார்த்திகைத் தீப ஒளியும் இன்று அழிந்து போய்க்கிடக்கின்றது. ஆனாலும் உணர்வுகளால் வாழும் எம் உறவுகளின் மனங்களில் கார்த்திகை மாதம் பல அழியாத நினைவுகளை நினைவூட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கும் நிலையில் எமது சனங்களின் வாழ்வு இன்று வலுவிழந்துபோய்க் கிடப்பதால் தான் என்னவோ கார்த்திகை மாதம் பூக்கும் கார்த்திகைப் பூக்களிலிருந்து கந்தக நெடி வீசுகிறது.
எந்தவித இராஜதந்திரம் இல்லாத அரசியல், சுயநலப் போக்குடைய உணர்ச்சி வசப்பட்ட அணுகுமுறை யாவும் மேலும் மேலும் எமது சனங்களின் வாழ்க் கையை பாதாள உலகத்திற்கே இட்டு சென்று கொண்டிக்கின்றன. முன்பு “ஒற்றுமையாகுங்கள்” என்று கூறிய வசனம் இன்று வேற்றுமையிலும் ஒற்றுமை காணுங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசத்தில் பூதாகாரமாய் உருவெடுக்கும் கோஷ்டி மோதல்களும் குத்து வெட்டுக்களும் கூத்தாடியாக இருக்கும் சமூகத்தை குதுகலத்தில் குளிக்க வைத்திருக்கின்றன. இதுவே முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சர்வதேசம் சிரிக் குமளவிற்கு புலம்பெயர்வாழ்வில் தற்போதைய அரைகுறை அல்லது அரைக் கால் தலைவர்கள் என தங்களை பெருமிதத்துடன் கூறுபவர்களினால் எம்தேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரமிக்கக்கூடிய வெற்றிகள்.
சிங்கள பௌத்த தேசம் ஒற்றுமையாக, இராஜதந்திர ரீதியாக, உணர்ச்சி வசப்படாத அணுகுமுறைகளினால் பெற்றுள்ள வெற்றிகளைகண்டு இன்று சர்வதேசம் திகைத்துள்ளது மட்டுமல்லாது, சர்வதேசம் மேலும் அவர்களுக்கு உதவப்போகிறது என்பதை அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற அறிக்கை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற உரைகள் கேள்வி பதில்களிலிருந்து ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. ஆகையால் உண்மையான சர்வதேச நிலைமை என்ன என்பதை புலம்பெயர் வாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.
சாத்வீக வழியில் எங்கள் அரசியல் உரிமைக்காக போராட வேண்டிய பொறுப்பு இன்று புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இருக்கிறது. அரசியல் போரா ட்டங்களை புலத்தில் அல்லாமல் நிலத்திற்கு மாற்றிக் கொள்வதே இன்ற அவசியமான தேவையாக இருக்கின்றது என்பதை எமது உறவுகள் உணர்ந்து கொள்ள வெண்டும்.
அவசியமானவற்றை அலட்சியம் செய்துவிட்டு தேவையற்ற முறையில் தமக்குள் தினமும் பிரச்சனைகளை அதிகரித்து கொள்வது, இறுதியில் எமது இனத்தை நாமே தாரைவார்த்து கொடுக்கும் நிலையை உருவாக்கும். ஆகையால் வருமுன் காப்பவர்களாக எங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய வேளை இது. உண்மையுடனும் உறுதியுடனும் உழைத்து கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழனும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் உறவுகளின் ஆன்மா சாந்தியடையட்டும்.
இழந்த உறவுகளை நினைவுகூறி நிற்கும் கார்த்திகைத் தீபஒளியின் கதிர்கள் அமைதியான வாழ்வுக்கான வழியை அடுத்த தலைமுறைக்காவது காட்டி நிற்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த இதழில் சந்திக்கிறேன்.
ஆசிரியர்
21.11.2011
0 comments:
Post a Comment