'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Wednesday, June 30, 2010

“இருக்கிறம்” இதழ் 57

இருக்கிறமின் 57ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. முன்னாள் போராளிகளின் திருமண புகைப்படத் துடன் அட்டைப்படம் வெளிவந்துள்ளது.

வழமைப்போல கதைகள், கட்டுரைகள், விளை யாட்டு, சினிமா என்று பலதரப்பட்ட ஆக்கங்கள் தொடர்கின்றன.

இம்முறை 'நேரடி ரிப்போட்டில்' 53 ஜோடிகளின் திருமணம், இந்த திருமணம் நடந்த பிண்ணனி, நடத்தி வைத்தவர்கள், மணமான ஜோடிகளின் மனநிலை என்பன பற்றி அலசி ஆராயப்பட்டுள்ள து. பல வெளிவராத தகவல்கள் வெளிவந்திருக் கின்றன.

தேவைப்பட்ட இடத்தில் குற்று போடாமல் விட்ட தால் ஏற்பட்ட விளைவை நகைச்சுவை எழுத் தாளர் வேதநாயகம் ‘காசுமேல காசு வந்து’ என்ற தலைப்பில் நகைச் சுவையாக எழுதியுள்ளார்.

டொக்டர் முருகானந்தன் தன் மருத்துவ கட்டுரையில் தாய்ப்பாலைப் பற்றிய பல்வேறு தகவல்கள், தாய்ப்பால் ஊட்டும் விதம், பாலின் தரம் என பல பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளார்.

வாசிக்கும் நெஞ்சங்களை சிறிது நேரம் சிரிக்க வைக்க ‘இளமை புதுமை கலாட் டா’ வெளிவந்திருக்கின்றது.

திருமணத்தில் சட்டம் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது பற்றி ‘சட்டம் பேசுகிறது’ பகுதி அலசிஆராய்கின்றது. திருமணத்தின்போது எவ்வாறான விடயங்கள் பற்றி கருத்திற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறு கின்றது.

‘தெரிந்த ராமனைவிட தெரியாத ராவணன் எவ்வளவோ மேல்’ என்ற பஞ்ச் தலைப்பில் ராவணன் திரைப்பட விமர்சனம் சுடச்சுட வெளிவந்துள்ளது.

யுத்தம், இடம்பெயர்வு என இன்னோரன்ன பிரச்சினைகளால் வடக்கு கிழக்கு மக்கள் காணிப்பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அந்த வகையில இம்முறை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவில் வசித்து வரும் மக்கள் காணிப் பிரச்சினை மற்றும் காணி உறுதிப்பத்திர பிரச்சினை களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை பற்றி ‘கிடைக்குமா தீர்வு’ என்ற தலைப் பின் கீழ் கட்டுரையாளர் சத்தியா எழுதியுள்ளார்.

மலையகப் பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அதற்கான கொடுப்பனவு கிடைக்காத மாணவி ஒருவரின் நிலைமை, அவரது தாயின் ஆதங்கம் பற்றி ‘புறக்கணிக்கப்படும் மலையக மாணவர்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.

இவற்றோடு இருப்பு, பதிப்பகத்தார், கார்ட்டூன், கமலாமாமி, அதற்குத்தக, குட்டிக்கதை, றொஷானியின் ‘புரிந்துகொள்ளவேண்டிய புரிதல்’, மயூரனின் விளையாட்டு, மொழிவாணனின் பேய்க்கதை, தொழில்நுட்பதகவல்கள், அன் பழகனின் ‘பெறுமதி மிக்க கருவி’, மணிப்புலவர் மருதூர் மஜீத்தின் ‘நாட்டார் பாட ல்கள்’, வாசக நெஞ்சங்களின் கருத்துக்கள் என சுடச்சுட இருக்கிறம் வெளி வந் துள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 56

பல புதிய ஆக்கங்களைச் சுமந்து இருக்கிறமின் 56 ஆவது இதழ் உள்ளேகாணப்படும் முக்கியமான ஆக்கங்களை பிரதிபலிக்கும் அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஐபா திரைப்பட விழா கொண்டாத்தின் பிண்ணனி பற்றியும் ‘தமிழன் என்ன இழிச்சவாயனா’ என்ற ஆக்ரோஷமான தலைப்பில் பதிப்பகத்தார் பகுதி வெளிவந்திருக்கின்றது.

ஜீன் மாதம் 20ம் திகதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ‘நேரடிரிப்போர்ட்’ பகுதியில் கிளி நொச்சி மாவட்டத்தில்அகதிகளாக வந்தவர்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் ஆடு மாடுக ளைப்போல அடைத்துவைக்கப்பட்டுள்ளமை பற் றியும் அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கஸ்டங்களை கேட்டும் அவர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

‘ஒற்றுமைப்படவேண்டியநேரத்தில் ஒற்றுமைப்பட்டிருந்தால்’ என்ற தலைப் பிலான கட்டுரை இலங்கை தேர்தல் வரலாற்றில் கட்சிக்கு கட்சி ஒவ்வொரு வருக்கும் ஒருவர் முரண்பட்டதால் ஏற்பட்ட தாக்கங்கள், தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்பதற்காக அன்றிருந்த தமிழ்த் தலைவர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்றவை அடங்கலாக மனதை நெகிழவைக்கும் கட்டுரையை பிரபல மூத்த பத்திரிகையாளரான கோபு எழுதியுள்ளார்.

அஷ்ரப் சிஹாப்தீனின் ‘அதற்குத்தக’ வில் இணையத்தில் இளையவர்கள் தாங்களும் தளங்கள் உருவாக்கி எழுதும் முறை பற்றி நகைச்சுவையாகவும் அதேநேரம் அவற்றின் தரம் பற்றியும் தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

வுpக்ரமாதித்தனின் ‘சினிமா விமர்சனம்’ பகுதியில் இம்முறை ‘சிங்கம்’ திரைப்படம் ‘அரைத்த மாவில் கலக்கிய மசாலா’ என்ற தலைப்பில் அலசிஆராயப்பட்டுள்ளது.

‘சட்டம்’ பகுதி இம்முறை வாசகர்களின் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைந்துள்ளது. அன்றாட வாழ்வில் சில விடயங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எப்படி சட்டத்தின் உதவியை நாடலாம் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பற்றிய ஒரு பார்வை விளையாட்டுப் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்கள் எவ்வாறு இயற்கை அழகுடன் ஒப்பிடப்படுகின்றனர் என்பது பற்றி மணிப்புலவர் தன் இலக்கியப் பகுதியில் நயம்பட தந்துள்ளார்.

களச்சாராய உற்பத்தி. பெரும்பாலும் இன்று மலையகப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் ஒரு கிராமமே அழிந்து வருவது பற்றி ‘கசிப்பில் மூழ்கும் அட்டாம்பிட்டிய கிராமம்’ கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் கார்ட்டூன், செங்கை ஆழியானின் ‘அவருக்கு பாஸ் கிடைத்துவிட்டது’ சிறுகதை, மொழிவாணனின் காற்றாய் வருவேன், கமலா மாமி, ராவணா ஸ்பெஷல், தீபச்செல்வனின் கவிதை, அன்பழகனின் உளவியல் கட்டுரை, வேதநாயகத்தின் ‘கோச்சி வரும் கவனம்’ நகைச்சுவைக் கதை, டொக்டர். முருகானந்தனின் மருத்துவம், கலட்டா, தொழிநுட்பத் தகவல்கள், வாசகர் கருத்து என பலதரப்பட்ட படைப்பபுகளுடன் வெளிவந்துள்ளது 56 ஆவது இருக்கிறம். வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 55

பல இன்னல்களைத் தாண்டி 50 இதழ்களை தொட்டுவிட்ட நிலையில் எமது 55 ஆவது இதழ் பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

நேரடி ரிப்போர்ட், கிரைம்தொடர்,சட்டம், இலக்கியம் என ஒவ்வொரு ஆக்கமும் ஒவ் வொரு மெருகுடன் வெளிவந்துள்ளது.

‘சிங்கள தீவிரவாதத்தின் சூத்திரதாரி’ என்ற தலைப்பில் பதிப்பகத்தார் ரணில்விக்ரம சிங்கவின்அரசியல் பற்றி கூறுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் இன்று அரசால் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கொம்பனித்தெருவில் உள்ள சுமார் 20 குடியிருப் புக்களை இடித்து தரைமட்டமாக்கியமை. அக்குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களின் தற்போதைய நிலை பற்றியும் அது தொடர்பான சில அமைச்சர்களின் பதில்கள் என்பவற்றையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது ‘நேரடி ரிப்போர்ட்’ பகுதி.

நேர்முகம் பகுதியில் அன்மையில் சக்தி சுப்பர்ஸ்டார் போட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாத்தளையைச் சேர்ந்த சங்கீதாவின் சிறப்பு பேட்டி இடம் பெற்றுள்ளது.
எதிராளிகளையும், ரோதிகளையும், வில்லன்களையும் கொலைசெய்வது பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். அன்பு காதலனே தன் காதலியை கொலை செய்ததைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ராஜகிரியவில் உள்ள புகழ் பெற்ற ரோயல்பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் இடம்பெற்ற வோனி ஜோன் ஸனின் கொலை பற்றி மிகவும் பரபரப்பாக வெளிவந்துள்ளது ‘கிரைம் பக்கம்’.

‘வளர்ச்சிப்பெறுமா மலையக விளையாட்டுத்துறை’ என்ற தலைப்பின் கீழ் இன்று மலையகத்தில் அருகிவரும் விளையாட்டுத்துறை பற்றி அலசி ஆராயப் பட்டுள்ளது.

‘கொமடியாகிப்போன நமது அரசியல்’ என்ற அதிரடி தலைப்பின் கீழ் விக்ரமாதித்தனின் சினிமா விமர்சனம் வெளிவந்துள்ளது. இம்முறை இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம் பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது.

‘சட்டம்’ பகுதியில் இம்முறை சட்டத்தரணி விவேகானந்தனால் அவசரகால சட்டம் என்றால் என்ன? மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற மூன்றாவது 20-20 உலகக் கிண்ண போட்டி பற்றிய ஒரு விறுவிறுப்பு ஆக்கம் இடம்பெற்றள்ளது.

டொக்டர் முருகானந்தம் எழுதிவரும் மருத்துவப் பகுதியில் ‘காதலும் உடல்நலமும்’ என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் காதலின் அவசியம், காதல் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன பற்றி மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இன்று எம்மவர் மத்தியில் இலக்கியம் பற்றிய அறிவு அருகிக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சுவாரஸ்யமான பகுதிகள் செய்யுள் மற்றும் உரைநடையில் இலக்கியம் பகுதியில் ‘சீறாப்புராணமும் சீவகசிந்தாமணியும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

அரங்கியல் பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற ‘நவ பிரதீபா 2010’ நிகழ்வைப்பற்றிய ஒரு கண்ணோட்டம் தரப்பட்டுள்ளது.

இன்று பொதுவாக எல்லா பஸ் வண்டிகளிலும் காணப்படும் ஒரு முக்கிய பிரச்சினைதான் இந்த மிகுதிக்காசு. இதை அடிப்படையாக வைத்து இம்முறை ‘தோட்டியின் பதிவு’ மிகவும் சுவாரஸ்யமாக வெளிவந்துள்ளது.

இவற்றோடு அஸ்ரப் சிஹாப்டீனின் ‘கண்ணேறு’, அன்பழகனின் ‘நான் சரியில்லை’, கார்ட்டூன்,கமலாமாமி,மொழிவாணன் எழுதும் திகிலுட்டும் பேய்க்கதை ‘காற்றாய் வருவேன்’, ‘சிறையிலிருந்து ஒரு மடல்’, தொழிநுட்ப தகவல்கள், கொஞ்ச நேரம் மற்றும் வாசகர்களின் கருத்துக்கள் அடங்கி 55 ஆவது இருக்கிறம் புதுமெருகுடன் வெளிவந்திருக்கிறது.
வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.


Wednesday, November 18, 2009

“இருக்கிறம்” இதழ் 43

மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் 43 ஆவது இதழ் வழமை போலவே வெளிவந்துள்ளது. அரசியல், விளையாட்டு, சினிமா, மலையகம், நகைச்சுவை, மருத்துவம் போன்ற அம்சங்களுடனும் சுவாரஷ்ய மாகவும் வாசிப்பதற்கு இலகுவான மொழி நடையு டனும் இது வெளியாகியுள்ளது .

இம்முறை பதிப்பகத்தார் பக்கத்தில் “நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்” என்ற அரசியல் கட்டுரை வெளிவந்திருக்கிறது. சரத்பொன்சேகாவின் இன்றைய அரசியல் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.

சிற்றிதழ்களின் வருகை குறைந்து வருகின்ற இக் காலகட்டத்தில் சிற்றிதழ்களின் ஆசிரியர்களை ஒன் றிணைத்து கொழும்பில் நடைபெற்ற சிற்றிதழ் மகாநாடு தொடர்பான கட்டுரை “சிந்திக்க வைத்த சிற்றிதழாளர் மாநாடு” என்ற தலைப்பில் வெளி வந்திருக்கின்றது.

அவ்வப்போது உலக அரங்கில் நடைபெறும் கிரிக்கட் தொடர்பான தகவல்களைத் தாங்கி “பலப்பரீட்சையில் சாதிக்கப்போவது யார்” என்ற லோசனின் கட்டுரையும், சீ.கே. மயூரன் எழுதிய “நடுவர், நண்பர் ஷெப்பர்ட்” என்ற கட்டுரையும் வெளிவந்திருக்கின்றன.

இருக்கிறமின் மலையகப் பார்வையில் செ.கிருஸ்ணா எழுதிய “மலையக மரபுகளின் அழிவு” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் மலையக மக்களுடைய மரபுரீதியான அழிவு இலங்கை பொருளாதாரத்தில் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்துகின்றது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மலர்மகன் தங்கமயில் எழுதிய “பேராண்மை” திரைப்பட விமர்சனம் சினிமாப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. “ பெண்மையின் வீரத்துடன் ஆண்மையின் அழகு” என்ற அழகான குறியீட்டு வரியுடன் இக்கட்டுரையின் ஆரம்பம் அமைந்திருக்கின்றது.

இந்த இதழ் முதல் “சட்டம் பேசுகின்றது” என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வாசகரிடையே சட்டம் பற்றிய விழிப்புணர்வை இது ஏற்படுத்த முனைகிறது. சட்டம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் வாசகர்கள் எமது முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எழுதி அனுப்பினால் அது தொடர்பான பதில்களை இருக்கிறம் சஞ்சிகை மூலமாக வழங்க அனுபவமிக்க சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர்.

யாழ்தேவி திரட்டியும் இருக்கிறமும் இணைந்து ஊடகங்களுக்கு அறிமுகப் படுத்தும் இன்றைய நட்சத்திரப் பதிவர் பகுதியில் பதிவர் வந்தியத்தேவன் பற்றி வெளியாகியுள்ளது. இதில் “திருமணங்கள் பேஸ்புக்கில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற அவருடைய ஆக்கம் பிரசுரமாகியுள்ளது. வலைப்பதிவுகளை அறிமுகம் செய்யும் புதிய பகுதியும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

டொக்டர் முருகானந்தம் எழுதிவரும் மருத்துவப் பதிவில் “நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்” என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. நுளம்பின் உருவாக்கம், அதன் வகைகள், அதனால் பெருகும் நோய்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு க் கட்டுரையாக இது அமைகிறது.

அழிந்துவரும் செப்புக் கலைவடிவங்கள் பற்றிய பார்வையை “கொழும்பில் கொப்பர் ஆர்ட்” என்ற ஆக்கம் வெளிக்கொணர்ந்திருக்கிறது. இவ்வாறான கலைகள் பற்றிய விடயங்கள் மக்கள் மத்தியில் வெளிக்கொணரப்படுவதன் மூலம் இக் கலையை பற்றிய தெளிவு, பயன்பாடு, அதன் சிறப்பம்சம் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அழிந்து போகும் இக்கலைக்கு இருக்கிறம் புத்துயிர் கொடுத்துள்ளது.

மனித உணர்வுகளையும் சமூக விழுமியங்களையும் படம்பிடித்து காட்டுகின்ற குறுந்திரைப்படங்கள் பற்றிய பார்வையொன்றை இம்முறை இருக்கிறம் வழங்கியிருக்கின்றது. எம்மவர்களின் தயாரிப்பில் வெளிவந்த “வேலி” என்ற குறும்படம் வாழ்வின் யதார்த்தத்தின் பதிவாக வெளிவந்திருக்கின்றது.

இவற்றைவிட அஸ்ரப் சிஹாப்டீனின் ‘அதற்குத்தக’ என்ற பகுதியில் “விரல்களற்றவனின் பிரார்த்தனை”, சேரன் கிருஸ்ணமூர்த்தி எழுதிய “நாங்களும் அவர்களும்”, மயில்வாகனம் சர்வானந்தாவின் கலைந்த பக்கங்கள் பகுதியில் “நடிகை பாடகி, என்.சி. வசந்தகோகிலம்”, றொசானி செந்தில் செல்வன் எழுதிய “துரத்துபவனும் ஓடுபவனும் ஒரே வட்டப் பாதையில்” போன்ற கட்டுரைகளுடன், கார்ட்டூன், நகைச்சுவை மற்றும் வாசக நெஞ்சங்களின் கருத்துக்களுடன் இருக்கிறமின் 43 ஆவது இதழ் வெளிவந்திருக்கின்றது.

வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

Sunday, November 1, 2009

'இருக்கிறம்'

அச்சுவலைச் சந்திப்புக்கு வருகைதரவிருக்கும் வலைப்பதிவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
இது வலைப்பதிவர்களுக்கான சந்திப்பு மட்டுமல்ல. அதிகரித்துவரும் வலைப்பதிவர்களுக்கான அங்கீகாரமே இது. தம்மை ஊடகங்களுடன் இணைத்து ஊடகவியலாளர்களுடன் ஒரு உறவுப்பாலத்தினை கட்டியெழுப்புவதற்காக சந்திப்பாக இது அமைகிறது.
ஸ்தாபக ஆசிரியர் இளையதம்பி தயானந்தா நேரடியான திரையில் ‘ஒன்லைன்’ மூலம் உரையாற்றவுள்ளார். அதே போல் வெளிநாடுகளில் வாழும் வலைப்பதிவர்கள் சிலரும் தோன்றுவதற்கு இருக்கிறார்கள். தொடர்ந்து ஊடகவியலாளர்களும் வலைப்பதிவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து கலந்து சங்கமிக்கும் நிகழ்வும் இடம்பெறும்.
முக்கியமாக வலைப்பதிவர்களுடைய பிரச்சனைகளோ, குறைபாடுகளோ இச்சந்திப்பில் உத்தியோகமாக கலந்துரையாடப்படமாட்டாது என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கிடையிலான நட்புரீதியான இணைப்பொன்றை ஏற்படுத்துவதே எமது முழு நோக்கம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
பிறகென்ன சந்திப்பில் கலக்குவோம்.

Friday, October 30, 2009

வலைப்பதிவர்களுக்காக!!


இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.
முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப் பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங் களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.

Friday, October 23, 2009

'அச்சுவலைச் சந்திப்பு'

வலைப்பதிவர்களையும் ஊடகத்தாரையும் இணைக்கும் இனிய மாலை நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வலைப் பதிவர்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு (28-10-2009) முன்னதாக தமது வரவினை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

இடைநிறுத்தப்பட்ட கட்டுரை பேசுகிறது!!

இருக்கிறம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து கொண்டி ருந்த மிஸிஸ் காதலி எழுதிய ‘கணவன் மனைவி புதினங் கள்’ கட்டுரை அனேகமான வாசகர்களின் வேண்டுகோளுக் கிணங்க இடைநிறுத்தப்பட்டிருப்பது வாசகர்கள் அனை வருக்கும் தெரிந்த விடயம். இத்தொடர் இருக்கிறம் சஞ்சி கையில் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தை அதன் எழுத்தாளர் இங்கே தருகின்றார். படித்தபின் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
‘’கணவன் மனைவி புதினங்கள் தொடர் ‘இருக்கிறம்’ வாசகர்கள் மத்தியில் பிரதானமாக இருவகையான உணர்வுகளை எழுப்பி விட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதனை ஆர்வத்துடன் வாசிப்பவர்கள் ஒரு புறமும் ‘வரவர சரியான அப்பட்டமாகப் போகின்றது, இது நிறுத்தப்படவேண்டும்..” என்று குறை சொல்பவர்கள் ஒருபுறமுமாக இரு அணிகள் தோன்றியிருக்கின்றன. வாசகர்களே! அப்பட்டமாக உங்களுடன் பேசத்தான் இந்தத் தொடரே ஆரம்பிக்கப்பட்டது. உணவைப் போன்றே எமது உடற்தேவைகளில் ஒன்றாக பாலியல் தேவைகள் இருக்கும் வேளையில், அதனை மறைத்து மறுதலித்துத்தான் எமது சமூகம் இவ்வளவு சீரழிந்து போனது என்பது எனது வாதம். எங்கள் சமூகத்தில் குழந்தை எப்படிப் பிறக்கின்றது என்பதைக் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு விளக்க முடியாத பெற்றோர்களே மலிந்து கிடக்கின்றனர். ஆரோக்கியமான உடல் உள வளர்ச் சியில் எங்கள் செக்ஸ் நடவடிக்கைகள் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. எங்களைப் பீடிக்கும் பல மனக்கோளாறுகளின் அடிப்படையில் செக்ஸ் ரீதியாகத் திருப்தியுறாத காரணிகள் இருப்பதை சைக்கியாட்ரிஸ்டுக்கள் கூறுகின்றனர். பண்டைய சீன டாவோயிஸ்ட் வைத்தியர்கள் தங்களிடம் வரும் நோயாளர்களுக்கு மூலிகைகள், அக்குபங்சர் முறைகள் இவற்றுடன் என்ன ஆசன முறையில் செக்ஸ் உறவு கொள்ள வேண்டுமென்றும் விளக்கி அனுப்புவார்களாம். தகுந்த உணவு முறை எங்களை ஆரோக்கியமாக வைத் திருப்பதைப்போல தகுந்த செக்ஸ் நடவடிக்கைகளும் ஆரோக்கியத்தைப் பேணக்கூடியன என்பது லொஜிக்தானே. அதை டாவோ யிஸ்ட் வைத்தியர்கள் தான் எங்களுக்கு வந்து சொல்ல வேண்டுமென்று அவசிய மில்லை தானே. இதைப் பற்றிய பூரண அறிவு கிடைக்காமல் சும்மா சினிமாவில் பார்த்தது அரைவாசி யும், ஏதாவது ஆபாச செக்ஸ் படத்தில் பார்த்த அரை வேக்காடு விஷயங்களை வைத்து மறுபாதியுமாகத்தான் இவற்றை கொப்பி அடித்து எங்கள் தம்பதியினரில் அனேகம்பேர் வாழ்ந்து கொண்டு போகின்றனர். செக்ஸ் நடவடிக்கையின் உச்சக்கட்ட உணர்வுகளை அனுபவியாமலே வாழ்ந்து இறந்து போகிறவர்கள் எத்தனை ஏராளம் தெரியுமா? என்ன பரிதாபம். இவ்வாறு அத்தியாவசியமான ஒரு உடலியக்கத்தையே தகாத நடவடிக்கை யாக்கி சென்சர் பண்ணி அதைச் சுற்றி ஒரு மர்ம வேலி போட்டு எமது இளம் சமுதாயத்தினரைப் பாடுபடுத்துகின் றோம். அவர்களை அநாவசியமாக பெரும் அழுத்தத்திற்குள்ளாக்குகின்றோம். மகிழ்சசியுடன் அனுபவிக்கப்படவேண்டிய வாழ்க்கையே சிலசமயங்களில் சுமையாக மாற வேண்டிய நிர்ப்பந் தம். பாலியல் உணர்வுகளுக்கான முறையான வெளிப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் களவாக சிறுவர் துஷ்பிரயோகத்தில்கூட ஈடுபடுகின்ற பண்பாடுதான் எங்கள் மத்தியில் மலிந்து வரும். நாங்கள் மூடிக் கட்டக் கட்ட, அது போர்னோ விடயங்களாக ஆபாசப்படங்களாக, பாடசாலை மற்றும் பல்கலைக் கழகங்களில் துர்நடத்தைகளாக, பிதுங்கிக்கொண்டு வெளியே வரும். சூடான இன்டர்நெற் சமாச்சாரங்களுக்கும், ஆபாசத் திரைப்படங்களுக்கும், போர்னோ சஞ்சிகைகளுக்கும் ரெடி மார்க்கட் உண்டாக்கப் பட்டிருக்கின்றது. சென்சர் அனுகுமுறையை விட்டு திறந்த சுதந்திர மான கருத்துப் பரிமாற்றங்கள் உள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் முன்வரவேண்டும். அதற்கு ‘இருக்கிறம்’ சஞ்சிகை தரும் பங்களிப்புக்கள் பெறுமதியானவை. இனியாவது இரு வாசகர் அணிகளும் ஒன்று சேர்ந்து ஒரு ஆதரவணியாகத் திரள வேண்டும் என்று தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
“எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே..”
-மிஸிஸ் காதலி-

Monday, September 28, 2009

இலங்கையிலிருந்து ஒரு தமிழ் சஞ்சிகை

வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. இதுவரை 39 இதழ்களைத்தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

உங்கள் தமிழில், உணர்வுள்ள நெஞ்சங்களின் உண்மைக் குரலாய், தடைகளைத் தாண்டி,உங்கள் கரங்களை நாடி, தரமான அம்சங்களுடன், " இருக்கிறம்" சஞ்சிகை.

Contact - T.P - 0113150836

Fax : 011 2585190
Email:irukiram@gmail.com
Office: ஈகோ பப்ளிசிங் ஹவுஸ் (பிறைவேற்) லிமிட்டட்
03, டொரிங்டன் அவன்யு, கொழும்பு - 07